ஜகன்னாதக் கண்ணனை கண்ணாரக் கண்டேன் – 2

ஜகன்னாதக் கண்ணனை கண்ணாரக் கண்டேன் – 2

இரவுமுழுவதும் ஹரிதாஸை பற்றியே நினைவாக இருந்தது. புரியின் முக்யமே ஹரிதாஸின் ஸமாதி என்றே எனக்கு தோன்றியது. ஶ்ரீமத் பாகவதத்தில், ஏகாதஸ ஸ்கந்தத்தில் ஹரிதாஸார்களின் பெருமை சொல்லபடுகின்றது. தெய்வம்கூட பொறுத்து பொறுத்து பார்த்து, கடைசியில் தண்டித்துவிடும். தேவர்களும் அப்படித்தான். இந்திரன் தனக்கு தரவேண்டிய ஒரு யாகத்தை நிறுத்தியதால், பகவான் என்றும் பார்க்காமல், கோகுலத்தையே அழிக்கப் பார்த்தான் அல்லவா? இதுதான் தேவர்களின் nature.

ஹரிதாஸர்களோ தனக்கு துன்பம் செய்தவர்களுக்குக் கூட துன்பம் செய்யமாட்டார்கள் என்பது மட்டும் அல்ல, துன்பம் இழைத்தவர்கள் கூட நன்றாக இருக்கவேண்டும் என்றும் மனதார நினைத்தும், பிரார்த்தனையும் செய்வார்கள். அப்படி ஒரு பக்தர் ஹரிதாஸர். அவர் பிறப்பினால் முஹமதியர். ஆனால் அவருக்கு பகவான் க்ருஷ்ணனிடம் பக்தி ஸித்தித்தது. எப்பொழுதும் இரவு பகலாக மஹாமந்திர கீர்த்தனை செய்துவந்தார். ஒரு நாளைக்கு மூன்று லட்சம் நாமா சொல்வார். அதைக் கண்டு பொறுக்காத சிலர் அவரை அடித்து, உயிர் பிரிகின்ற தருவாயில் கங்கையில் போட்டுவிட்டார்கள். அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்து சென்றுவிட்டார்கள். கங்காமாதாவின் அருளால் உயிர் பிழைத்த அவர், தன்னை அடித்த ஸாதுக்களுக்கு கை வலிக்குமே, அவர்கள் நன்றாக இருக்கவேண்டுமே என்று அழுதுக்கொண்டே பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டார். இதுவன்றோ ஹரிதாஸர்களின் பெருமை. இத்தகைய ஸாதுக்களின் பெருமையை ஶ்ரீமத் பாகவதத்தின் ஏகாதஸ ஸ்கந்தத்தின் இரண்டாவது அத்யாயத்தில் வஸுதேவர் நாரதரிடம் எடுத்து சொல்லுகின்றார்:

भूतानां देवचरितं दुःखाय स सुखाय च ।
सुखायैव हि साधूनां त्वादृशामच्युतात्मनाम् ॥
பூ⁴தானாம்ʼ தே³வசரிதம்ʼ து³꞉கா²ய ஸ ஸுகா²ய ச ।
ஸுகா²யைவ ஹி ஸாதூ⁴னாம் த்வாத்³ருஶாமச்யுதாத்மனாம் ।।

இந்திரன் போன்ற தேவர்களுடைய செய்கையானது, மனிதர்களின் சுகத்திற்கும் துக்கத்திற்கும் காரணமாக ஆகிறது. ஆனால் சாதுக்களின் சரித்ரமோ மனிதர்களின் சுகத்திற்கு மட்டுமே காரணமாகின்றது.

எங்கெல்லாம் மஹாமந்திரம் தொடர்ந்து நடக்கின்றதோ, அவ்விடங்கள் அனைத்தும் என் இதயத்திற்கு மிகவும் போக்யமாக இடங்களாகும்.

முதன்முறையாக, பல வருடங்களுக்கு முன்பாக, அபேதானந்ததர் ஆஶ்ரமம் சென்றபோது, தொடர்ந்து மஹாமந்திர கீர்த்தனம் நடந்துவரும் “நாமவேதி” – அந்த இடத்திற்கு சென்றவுடன் மூர்ச்சயாகி விழுந்துவிட்டேன்.

சமீபத்தில் ஒரு ஸப்தாஹத்திற்கு திருவனந்தபுரம் சென்றபோது, முடிந்தபோதெல்லாம் அபேதானந்தர் ஆஶ்ரமம் சென்று மஹாமந்திர கீர்த்தனம் செய்துவந்தேன். இப்படி ஒருமுறை செய்யும்போது, ஒரு தெய்வீக ஶக்தி என் கைவிரல் நுனிகளின் வழியாக உள்ளே ஊடுருவி செல்வதை ப்ரத்யக்ஷமாக உணர்ந்தேன்.

இது போன்று இதயபோக்யமான மற்றொரு இடம் – ராதாகுண்டத்தின் அருகில் அமைந்துள்ள ரகுநாததாஸ் கோஸ்வாமிபாதரின் ப்ருந்தாவனமாகும். எந்த ஒரு ரகுநாததாஸ் தனது குருவான மஹாப்ரபுவின் சந்தோஷமே தனது வாழ்வின் முக்கிய லக்ஷ்யம் என்பதை உணர்ந்து, ஒரு நாளிற்கு ஒரு glass மட்டும் பால் சாப்பிட்டு, இரவு பகலாக மஹாமந்திர கீர்த்தனம் செய்தும், ஶ்ரீ ராதையின் தினசரி கைங்கரிய பாவத்திலேயே இருந்து வந்தாரோ, அந்த இடத்திலும் மஹாமந்திர கீர்த்தனம் செய்வது மிகவும் ஆனந்தத்தைத் தரும். இத்தகைய மஹான்களை நினைக்கும்போதே மனது ஒரு அலாதியான சுகத்தை அனுபவிக்கின்றது. ரகுநாதர் மஹாமந்திர கீர்த்தனம் செய்தார்; குரு பக்தியில் திளைத்து இருந்தார்; ராதையின் தினசரி கைங்கர்ய பாவத்தில் நிலைத்து இருந்தார்; நித்ய உபவாசியாக இருந்தார்; அந்த இடத்தில் அமர்ந்து நாம கீர்த்தனம் செய்யும்போது நேரத்தை மறந்துவிடுவோம். அங்கு கீர்த்தனம் செய்யும்போது, பூவுலகில் காணமுடியாத தெய்வீகமான வர்ணமயமான (Colours) ஜாலங்கள் ஏற்பட்டது.

இப்போது நாம் ஸ்தாபித்துள்ள நாமத்வார் அனைத்திலும் விடாமல் நாம சங்கீர்த்தனம் நடந்துவருவதால், அங்கு பகவானின் ஸாந்நித்யம் இருப்பதை நன்றாக உணர்கிறேன். இந்த ஹரிதாஸ் சமாதி ஒரு சின்ன சந்தில் உள்ளது. சமாதி கட்டிடத்தில் ஒரு 200 பேர் அமர்ந்து நாமகீர்த்தனம் செய்ய ஒரு சிறிய ஹாலும் இருக்கின்றது. ஹரிதாஸ் சமாதியில் அமர்ந்து சில மணிநேரம் நாம சங்கீர்த்தனம் செய்துவிட்டு, மீண்டும் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன்.

பாவபூர்வமான பிரவசனமோ, சங்கீர்த்தனமோ அது நிறைவடைந்த பின்பும் மனது அதையே அசைபோட்டுக்கொண்டு இருக்கும். மனது இயல்பு நிலைக்கு வருவதற்கு பல மணி நேரங்கள் ஆகும்.

மாலை சித்த பகுள ஸ்தலம் என்ற இடத்திற்குச் சென்றேன். நான் காலையில் சென்றது ஸ்வாமி ஹரிதாஸ் சித்தியான இடம். இந்த இடம், ஹரிதாஸ் அமர்ந்து சுமார் 22 (வருடம் 1512-1533) வருடங்கள் அமர்ந்து நாமம் சொன்ன இடம். மஹாபிரபு, ஹரிதாஸருக்கு தரிசனம் கொடுக்க இங்கு அடிக்கடி வருவார். அப்படி ஒரு சமயம் வரும்போது, ஜகந்நாதர் பல் தேய்த்த ஒரு குச்சியை பிரசாதமாக கொடுத்தார்.

எந்த பகவானுடைய பல்வரிசைகள் முத்து முத்தாக இருக்குமோ, அந்த பகவானே தேய்த்த அந்த குச்சியை, அதுவும் ஸ்வயம் மஹாபிரபுவே ஹரிதாஸருக்கு கொடுக்க, ஹரிதாஸர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ஹரிதாஸர் அதை வைத்துக்கொண்டே மஹாமந்திரம் சொல்லிவந்தார். ஒரு நாள் அந்த குச்சியை மண்ணில் நட்டார். அது ஒரு மரமாக வளர்ந்து இன்றும் ஹரிதாஸருடைய பெருமையை பறைசாற்றி கொண்டிருக்கிறது.

மஹாபிரபு அவரைப்பார்க்க தினமும் வருவார். பக்தர்களை அனுப்பி, ஹரிதாசரை தினமும் தரிசனம் செய்துவரச் சொல்லுவார். அப்படி ஒருமுறை மஹாபிரபு தரிசனம் கொடுக்க வரும்போது, ஹரிதாசர் நோய்வாய்பட்டிருந்தார். மஹாபிரபுவிடம் ஹரிதாசர் என்ன பிரார்த்தனை செய்தார் தெரியுமா, “என்று என் நாவால் மூன்று லட்சம் நாமும் சொல்ல முடியவில்லையோ அன்றே என் பூலோக வாழ்க்கையும் முடிந்து விட வேண்டும்”. மஹாபிரபு அப்படியே அனுக்கிரகித்தார்; அதுபோலவே நடக்கவும் செய்தது. ஹரிதாஸரின் ஆத்மா கிருஷ்ண சரணத்தை அடைந்தவுடன் அவரை தன் இரு கைகளில் தாங்கிக்கொண்டு மஹாபிரபு ஒரு பிரேம நர்த்தனம் செய்தாரே பார்க்கலாம்! அவருடன் அநேக பக்தர்களும் நாமகீர்த்தனம் செய்து ஆடிப் பாடினர். “ஹரிதாஸர் கோலோக விஜயம் செய்துவிட்டார்! ஹரிதாஸர் கோலோக விஜயம் செய்துவிட்டார்! ” என்று சொல்லி சொல்லி மஹாப்ரபு கீர்த்தனம் செய்தார். ஹரிதாஸ் கோலோக விஜயம் செய்ததை ஒட்டி மஹாபிரபு, பாகவதர்களுக்கு ஒரு ததீயாராதனை செய்ய ஆசைப்பட்டார். அதற்கான அரிசி, பருப்பு, நெய் போன்ற பொருட்களை மஹாபிரபுவே கடைக்கடையாக சென்று, தன் காவி வேட்டியில் பிக்ஷையாக வாங்கினார்.

ஹரிதாசரை நினைக்கும்போது மற்றொரு விஷயமும் மனதில் ஓடி வருகின்றது. ஶ்ரீ அத்வைதாசாரியர் வீட்டில் ஶ்ராத்தம் – அதாவது அவருடைய தந்தைக்கு செய்யவேண்டிய திதி. அந்த திதியன்று செய்யும் உணவை அந்த குடும்பத்தினர் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது ஶாஸ்திர விதி. அன்று அத்வைதாசாரியர் அந்த உணவை எடுத்து ஹரிதாஸருக்கு கொடுத்துவிட்டார். புரியில் உள்ள பண்டிதர்கள் எல்லாம் முகமதியரான அவருக்கு எப்படி கொடுக்கலாம் என்று சண்டைக்கு வந்துவிட்டனர். ஹரிதாஸ் இந்த உணவை உட்கொள்ளுவதாலேயே என் பித்ருக்கள் எல்லாம் கரையேறிவிடுவார்கள் என்றார்.

ஸ்ரீ அத்வைதாசாரியர் போன்ற ஶாஸ்திரம் படித்தவர்களுக்கு ஹரி நாமத்திலும் அந்த நாமத்தில் திளைக்கும் சாதுக்கள் இடத்திலும் எவ்வளவு நிஷ்டை. இதுவன்றோ பாகவத தர்மத்தின் பெருமை!

நம்மாழ்வாரும்:
“வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆளென்று உள் கலந்தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே” என்று கூறுகிறார்.
பகவானின் அடியார்க்கு அடியாராக யார் இருப்பினும்- எந்த குலம், என்ன குணம் என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன்; அந்த அடியார்க்கு அடியாரே நான் தொழும் தெய்வம், என்றல்லவோ கூறுகிறார் ஆழ்வார்!

__தொடரும்