ஜகன்நாதக் கண்ணனை கண்ணாரக் கண்டேன்!
ஜகன்நாதக் கண்ணனை கண்ணாரக் கண்டேன்!
சப்த மோக்ஷபுரிகளில் புரிக்கு முக்கியமான ஒரு ஸ்தானம் உண்டு. ஆதிஶங்கரர் “ஜகன்நாதஸ்வாமி நயனபதகாமி பவது மே” என்று ஜகன்நாத அஷ்டகம் செய்துள்ளார்; புரியில் ஒரு ஶங்கர மடத்தையும் ஸ்தாபித்துள்ளார் பகவந்நாம போதேந்த்ராளும் இந்த ஊரில் வஸித்து வந்த லக்ஷ்மீதரகவி என்ற பண்டிதரிடமிருந்து ‘பகவந்நாமகௌமுதி’ என்ற கிரந்தத்தைப் பெற்று, அதை ஆதாரமாக வைத்துத்தான் பகவந்நாமசித்தாந்தம் செய்தார்.
நம் தென்னிந்தியாவில் தோன்றிய ஆழ்வார்களும், வைணவ ஆச்சாரியார்களும் ஸ்ரீரங்கநாதனையே ஆஶ்ரயித்து இருந்தார்கள். கர்னாடகாவில் தோன்றிய வைணவ ஆசாரியர்கள், உடுப்பி கிருஷ்ணனையே ஆஶ்ரயித்து இருந்தார்கள். அதுபோல் கேரள தேசத்து பக்தர்கள், குருவாயூரப்பனையே ஆஶ்ரயித்து இருந்தார்கள். மஹாராஷ்ட்ரா சந்துக்கள், பண்டரிநாதனையே ஆஶ்ரயித்து இருந்தார்கள். உத்தரபிரதேசம், ஜெய்பூரில் உள்ள பக்தர்கள், ஸ்ரீ ப்ருந்தாவனத்தையே ஆஶ்ரயித்து இருந்தார்கள். அதுபோல் வங்காளம், ஒடிசா, தற்போதைய ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியில் உள்ள பக்தர்கள் மற்றும் ஆசார்யபுருஷர்கள், புரி ஜகன்நாதரையே ஆஶ்ரயித்து இருந்தார்கள். வேதத்திலேயே, திருவேங்கடத்தைப் பற்றியும், புரி ஜகன்நாதக்ஷேத்திரத்தைப் பற்றியும் வருகின்றது என்று பெரியோர்கள் சொல்லிக் கேட்டது உண்டு.
நம் தமிழ்நாட்டைப் போலவே, வங்காளத்தில் நிறைய ஶாஸ்திரம் படித்தவர்கள், அதிலும் தர்கஶஸ்திரம் படித்தவர்கள் இருந்தார்கள். ஶ்ரீ சைதன்யர், ஶ்ரீ நித்யானந்தர், விஷ்ணுப்ரியா, ஶ்ரீவாஸ பண்டிதர், ஶ்ரீ அத்வைதாசார்யார், ஶ்ரீ வாசுதேவ ஸார்வபௌமர், ஶ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர், ஶாரதாமணி, விவேகானந்தர், மற்றும் அவருடன் வந்த மஹாபுருஷர்கள் எல்லோரும் தோன்றியது இந்த வங்காள தேசத்தில்தான். நம்முடைய தேசியகீதத்தை எழுதிய ரவீந்த்ரநாத் தாகூரும் வங்காள தேசத்தில்தான் பிறந்தார். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட நேதாஜீ ஸுபாஷ் சந்திர போஸ்ஸும் இந்த தேசத்தைச் சேர்ந்தவர்தான்.
புரி என்றவுடன் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது புரியின் ரதோத்ஸவமும், புரியின் ப்ரஸாதமும்தான். பூனை ஏதாவது ஒரு ஆகாரத்தை முகர்ந்து பார்க்குமானால், அதை உண்ணக்கூடாது என்று ஶாஸ்திரம் சொல்கிறது. ஆனால், புரியின் ப்ரஸாதத்தை பூனையின் வாயிலிருந்துகூட பிடுங்கி சாப்பிடலாம் என்று சொல்வார்கள். ஶ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் புரி ப்ரஸாதம், ப்ருந்தாவன மண், கங்கை நீர், மூன்றும் ப்ரம்மமே, என்று திரும்பத்திரும்பச் சொல்லிவருவார்.
புரி ரகசியமான ப்ருந்தாவனமும்கூட! இங்கு பகவான் க்ருஷ்ணர் தன்னுடைய சகோதரரான பலராமருடனும், தன்னுடைய சகோதரியான ஸுபத்திராவுடனும் கோவில் கொண்டுள்ளார். இது அன்னக்ஷேத்திரம். பக்தர்களுக்கு எப்பொழுதும் ப்ரஸாதம் விநியோகம் செய்துக்கொண்டே இருக்கிறார்கள். பண்டரிநாதனைப்போல் ஜகந்நாதரும் பக்தர்களுடன் நிறைய லீலைகள் செய்திருக்கிறார்.
வைஷ்ணவ ஆசார்யரான ராமானுஜர், தன்னுடைய அவதார காலத்தில் அதிககாலம் ஶ்ரீரங்கத்தில் தங்கியிருந்ததுபோல், சைதன்ய மஹாப்ரபுவும் தனது வாழ்நாளில் அதிகமாக இங்கு தங்கியிருந்தார். இந்த க்ஷேத்திரம் சைதன்ய மஹாப்ரபுவின் பக்தர்களுடன் நெருங்கிய தொடர்புடையது.
ஏனோ புரி க்ஷேத்திரத்திற்கு நான் இது நாள் வரை சென்றதில்லை. இரண்டு அல்லது மூன்றுமுறை கிளம்பி, பாதியில் திரும்பிவிட்டேன். ஜகந்நாதர் ஏனோ அழைக்கவில்லை! ஆனால் அதற்குள் ஜகந்நாதரே என்னை தேடிவந்துவிட்டார்; 2007 ஆம் வருடம் செப்டம்பர் மாதம், 26 ஆம் தேதியில் கோவிந்தபுரம் சைதன்யகுடீரத்தில், ஶ்ரீ ஶ்ரீ அண்ணா ஶ்ரீ ஜகந்நாதர், ஸுபத்திரா, பலராமர், சைதன்ய மஹாப்ரபு, நித்யானந்தரை ப்ரதிஷ்டைசெய்தார். அன்றிலிருந்து இன்றுவரை காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தொடர்ந்து, ஒரு நாள் கூட தவறாமல் மஹாமந்த்ரகீர்த்தனம் அங்கு நடைபெற்றுவருகிறது. அன்றிலிருந்து இன்றுவரை அங்கு ஶ்ரீ விஷ்ணுராத பாகவதர் ஆத்மார்த்தமாக பூஜை செய்துவருகின்றார். நாம் அடிக்கடி திவ்யநாமம் செய்கின்றோமே! இதற்கு ‘ஜகந்நாத ப்ரதக்ஷிணம்’ என்றே பெயர். புரியிலிருந்துதான் இந்த ஸம்ப்ரதாயம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால்தான் இன்றும் திவ்யநாமத்தின் முடிவில், “தாரு ஜகந்நாத தாரோ ஹரே” என்ற கீர்த்தனத்தைப் பாடுகிறோம். ஶ்ரீ ஜயதேவர், ஜகந்நாதர் மீதுதான் அஷ்டபதி பாடினார். அதனால்தான் 12வது அஷ்டபதியில் “நாத ஹரே! ஜகந்நாத ஹரே!” என்று பாடுகின்றார். இங்கு மஹாப்ரபுவின் பக்தர்கள், அகண்டமான மஹாமந்திர கீர்த்தனத்தால், ஜகந்நாதரை ப்ரஸன்னமாக்கினார்கள்.
ஒடியா மொழியிலும் சிலர் ஶ்ரீ மத்பாகவதத்தை எழுதியுள்ளார்கள். நம்முடைய ஸத்ஸங்கத்திற்க்கு ஆதாரமான ஶ்ரீமத் பாகவதம், மஹாமந்திரம், திவ்யநாமம் மற்றும் அஷ்டபதி, எல்லாம் ஜகந்நாதருடைய ப்ரஸாதம்தான்.
ஶ்ரீ ஶ்ரீ அண்ணவின் ஜகந்நாத அஷ்டகத்தை சைதன்ய குடீரத்தில் சொல்லுவேன்; ஒவ்வொரு ஶ்லோகத்தின் கடைசி வரியில் “கதா வீக்ஷே க்ருஷ்ணம் ஹலதரஸுபத்ராஸஹசரம்” அதாவது “ பலராமர் மற்றும் ஸுபத்திரா ஸஹிதரான ஜகந்நாதரை எப்பொழுது தரிசனம் செய்வேன்?” என்று வரும். அந்த வரிகளை மனதில் நினைத்து நினைத்து ஏங்குவேன். அது போல், சைதன்ய குடீரத்தில் வருடாவருடம் ரதோத்ஸவம் நடக்கும்பொழுதும், என் மனதிலுள்ள தாபம் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆம்! உண்மையிலேயே என்னை ஜகந்நாதர் அழைத்துவிட்டார்…..
August முதல் தேதி கிளம்பி, August 2 ஆம் தேதி புரி ஜகந்நாதக்ஷேத்திரத்தை அடைந்தேன். தங்கியிருந்த இடத்திற்குச் சென்று, குளித்துவிட்டு கோவிலுக்கு உடனே கிளம்பினேன். மனது ஒரு பரபரப்பான நிலையில் இருந்தது; ப்ரம்மாண்டமான வீதி; மிகவும் தூய்மையாக இருந்தது; ஸமீபத்தில்தான் ரதோத்ஸவம் முடிந்திருந்ததால் மூன்று ரதங்களும் பிரிக்கப்படாத நிலையில் வரிசையில் இருந்தன. மனதினாலேயே அந்த ரதங்களில் ஜகந்நாதர், பலராமர், ஸுபத்திராவை நிறுத்தி, ஒரு கணம் ஆனந்தம் அடைந்தேன். ப்ரம்மாண்டமான கோவில் கோபுரம் தெரிந்தது. கோவில் கோபுரத்திற்கு மேலுள்ள “ஜண்டா” (கொடி) பறந்து கொண்டிருந்தது. மஹாபிரபு, முதல் யாத்ரையில் இந்த கொடியை ஊர் எல்லையில் இருந்தே பார்த்து, தன்னை மறந்த பரவசத்துடன் ஓடிவந்து ஜகந்நாதர் ஸந்நிதியில் மூர்ச்சை ஆகி கீழே விழுந்தது, எல்லாம் மனதில் படம்போல் ஓடியது. நான் சென்ற அன்று ஆடி மாதம் வெள்ளிகிழமை; கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது; எப்படியோ சமாளித்துக் கொண்டு உள்ளே சென்று ஜகந்நாதர், சுபத்ரா, பலராமரை, தர்சனம் செய்துவிட்டேன்! தர்சனம் செய்தவுடன் முதல் எண்ணமே “என்னை அழைத்து தர்சனம் கொடுக்க இவ்வளவு நாள் ஆயிற்றோ உனக்கு?” என்று தோன்றியது; ஜகந்நாதரை பார்த்தவுடன் அழுகை வந்தது; மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று முறை தர்சனம் செய்தேன். மிகபெரிய கோவில், மிக பெரிய சந்நிதி, தூரத்தில் இருந்து பார்த்தாலும், நன்றாக தர்சனம் ஆகும். 8 மணிக்கு ஸ்வாமிக்கு பூஜை நடந்தது. அதற்கு பிறகு உள்ளே சென்று தர்சனம் செய்ய அனுமதித்தார்கள். உள்ளே சென்று தர்சனம் செய்தேன். அதுவரையில் பிரகாரத்தில் அமர்ந்து விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஆத்மநிவேதனம், மஹாமந்திரம் எல்லாம் உடன் வந்திருந்த பக்தர்களுடன் சொல்லிக்கொண்டிருந்தேன். பிரகாரத்தில் உள்ள எல்லா ஸன்னிதிகளையும் தரிசனம் செய்தேன். ஶ்ரீ லோக்நாத் பண்டா (ஸாஸ்திரி) அவர்களும், அவர்களை சேர்ந்தவர்களும் நன்றாக தர்சனம் செய்துவைத்தார்கள். தர்சனத்திற்கு பிறகு ஜகன்நாதர் அமுதுசெய்த கிச்சடியும், கீரும்(பாயசம்) பிரசாதமாக தந்தார்கள். “ஜகன்நாதர் பிரசாதம் ஜகன்நாதனே”, அதே பாவத்துடன் எடுத்துக்கொண்டு மனதில் ஒரு நிறைவையும் நிம்மதியையும் உணர்ந்தேன்.
இந்த கோவிலுடைய விமானம் 217 அடி உயரம் உள்ளது. இந்த கோவில் விமானத்தின் நிழல் கீழே விழுவதில்லை. இந்த கோபுரத்தின் மீது ஒரு பறவை கூட வந்து அமர்வதில்லை. கோவிலின் கொடி காற்றோட்டத்திற்கு எதிர் திசையில் பறக்கின்றது. கர்பக்ருஹத்திற்கு உள்ளேயும் நிறைய மரச்சிற்பங்கள் உள்ளன. ஒரு கோவிலுக்கு 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வதுபோல், இந்த கோவிலில் சுமார் 12 வருடத்திற்கு ஒரு முறை, மூர்த்தியையே மாற்றுகின்றார்கள். 2014க்கு முன் இந்த கோவிலுக்கு சென்றவர்கள் பாக்யவான்கள். அப்போதெல்லாம் ஜகன்நாதரை மிகவும் அருகில் தரிசனம் செய்யவிடுவார்கள். கோவில் கடற்கரைக்கு மிக அருகில் இருந்தாலும், கடலின் அலை சப்தம், கோவிலுக்குள் கேட்பதில்லை. அன்று இரவு தரிசனம் செய்த பிறகு, படுக்கச் சென்றேன். மஹாப்ரபு, தன் பக்தர்கள், ஜகன்நாதர், இதுபோன்ற எண்ணங்களே மனதில் மேலோங்கி இருந்தன…
……. தொடரும்